ஜமுனாமரத்தூரில் இரவு தங்கி கலெக்டர் முருகேஷ் ஆய்வு
முதல்வர் உத்தரவு
வேலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவை திட்டத்தை ஆய்வு செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை பார்வையிட நேற்று சென்ற கலெக்டர் பா.முருகேஷ், இரவு அங்கேயே தங்கி பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவு திட்டத்தையும் ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்டம்
ஜமுனமரத்தூர் ஊராட்சி ஓன்றியம் தீர்த்தனூர் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு பட்டியலில் உள்ளவாறு வழங்கப்படுகிறதா? என கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். பிறகு மாணவ-மாணவியர்களுடன் தரையில் உட்கார்ந்து அவரும், உடன் சென்ற கூடுதல் கலெக்டரும், உதவி கலெக்டரும் காலை உணவை உட்கொண்டனர்.
ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் தீர்த்தனூர் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய சமையற் கூடம், சுற்றுசுவர், சாலை வசதி மற்றும் அடிப்படை தேவைகள் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று அவர்களிடம் கலெக்டர் உறுதி அளித்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இதனைத் தொடர்ந்து வீரப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய நியாயவிலை கடையின் கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட பணிகளையும், கோவிலூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தோட்டக்கலை துறை சார்பாக தேனீ பூங்கா, மிளகு தோட்டம், அரசு சுற்றுலா மாளிகை, பூங்கா, மகளிர் திட்டம் சுய உதவிக் குழுவின் மூலம் மா, பலா, தேக்கு உள்ளிட்ட நாற்றாங்கால் மரக்கன்றுகள் வளர்ப்பு பணி, அரசு ITI வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களையும் பார்வையிட்டு ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி
பின்னர் பிரதான் மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கண் மருத்துவமனை, சி.டி.ஸ்கேன் அறை, கர்ப்பிணிதாய்மார்கள் பரிசோதனை அறை, மருந்து இருப்பு அறையினையும் பார்வையிட்டார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 18 விவசாய பயனாளிகளுக்கு தென்னங்கன்று, உளுந்து பயிர், இடுபொருட்கள், மருந்து தெளிப்பான்களை பயனாளிகளுக்கு விவசாயம் சார்ந்த பொருட்களையும் கலெக்டர் வழங்கினார்.
தினை, தேன்
இப்பகுதியை சேர்ந்த விவசாய பெருங்குடிமக்கள் மகளிர் சுய உதவிகுழுக்கள் மூலம் இணைந்து விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் அதிக இலாபம் பெற முடியும், இப்பகுதியில் கிடைக்கக்கூடிய தினை, தேன் ஆகிய பொருட்களுக்கு நிறைய வரவேற்பு உள்ளது எனவே அதிகளவில் தயாரித்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என பொதுமக்களை கலெக்டர் முருகேஷ் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு
ஜமுனாமரத்தூர் வட்டத்தில் வருவாய்த்துறையின் மூலமாக வழங்கப்படும் சாதிச்சான்றுகள், முதியோர் உதவித் தொகை சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறதா? என கலெக்டர் கேட்டறிந்தார். நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்புகள் மேற்கொண்டு விவசாயம் செய்து வருபவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களை ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவருடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஷ்மி ராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் சென்றிருந்தனர்.
No comments