தாய்மார்களின் பாலூட்டும் அறையாக மாறிய எஸ்கேபி வாகனம்
திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் வாகனங்கள் கை குழந்தைகளுடன் கிரிவலம் வரும் தாய்மார்களின் வசதிக்காக பாலூட்டும் அறையாக மாற்றப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. இது தவிர தன்னார்வல அமைப்புகளும் பக்தர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றன.
இன்று சிவராத்திரியை யொட்டி காலை முதல் கொண்டே வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றார்கள். கை குழந்தைகளுடனும், குடும்பத்தாருடனும் ஏராளமான பெண்கள் 14 கிலோ மீட்டர் மலையை வலம் வந்தனர்.
லட்சக்கணக்கானோர் நிறைந்துள்ள கிரிவலப்பாதையில் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட சிரமப்படுவதை அறிந்த திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்விக்குழுமம் தங்களது பள்ளி கல்லூரி வாகனங்களைத் தற்காலிக 'தாய்மார்கள் பாலூட்டும் அறையாக' மாற்றியுள்ளது.
திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் எஸ்.கே.பி கல்விக்குழுமத்திற்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் இந்த வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களைப் பயன்படுத்தும் தாய்மார்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் எஸ்.கே.பி குழுமத்தின் தலைவர் கே.கருணாநிதி. இணை செயலாளர் கே.வி. அரங்கசாமி, தலைமைச் செயல் அதிகாரி முனைவர் சக்தி கிருஷ்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கரன், எஸ்.கே.பி வனிதா பன்னாட்டுப் பள்ளி முதல்வர் பிரதிபா மதன், எஸ்.கே.பி மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் பெரியநாயகி மற்றும் எஸ்.கே.பி மின்னனுவியல் துறைத் தலைவர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனநடமாட்டம் உள்ள பகுதிகளில் பாலூட்டுவதில் உள்ள சிரமத்தை அறிந்து அதற்காக தங்களது வாகனங்களை அளித்த எஸ்.கே.பி கல்விக் குழுமத்திற்கு தாய்மார்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
No comments