வீரர்களுக்கு இணையாக இறகு பந்து விளையாடிய கலெக்டர், எஸ்.பி
திருவண்ணாமலையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலெக்டரும், எஸ்.பியும் வீரர்களுக்கு இணையாக இறகு பந்து விளையாடி கலக்கினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
2022-2023-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தடகளம், செஸ், கைப்பந்து, பேட்மிட்டன், கபாடி உள்ளிட்ட 5 பிரிவுகளாக வகைப்படுத்துப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் பங்குபெற இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியும். தனி நபர்கள் பிரிவில்; 11,560, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 18,563 என மொத்தம் இதுவரை இணையதளத்தில் 30,123 நபர்கள் பதிவு செய்துள்ளனர். விளையாட்டு போட்டிகள் காலை 6.30 மணிக்கு தொடங்கி, மாலை 6.30 மணி அளவில் நிறைவு பெறும்.
இன்று அரசு ஊழியர்களுக்கு மட்டும் தடகளம், கைப்பந்து, இறகுப்பந்து, கபாடி, செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் 944 நபர்கள் பங்கேற்றனர். வரும் 14ந்தேதி அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. 22, 23 ஆகிய நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தடகளப் போட்டிகள் மட்டும் நடத்தப்படவுள்ளது.
24லிருந்து 26ந்தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினருக்கான குழுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. 27, 28 தேதிகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினருக்கான மட்டைப்பந்து போட்டி நடைபெறும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பொதுப்பிரிவினருக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் இறகுப்பந்து போட்டி உள்ளிட்ட போட்டிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவரும், எஸ்.பி கார்த்திகேயனும் போட்டி வீரர்களுடன் இறகு பந்து விளையாடினர். உயரே பறந்து வந்த பந்துகளையும், மின்னல் வேகத்தில் வந்த பந்துகளையும் கோட்டை விடாமல் அவர்கள் அடித்து ஆடி பார்வையாளர்களின் கைதட்டலை பெற்றனர்.
இதே போல் தற்காப்பு கலைகள் குறித்த கலை நிகழ்ச்சியில் இடம் பெற்ற வால் சண்டையும் பார்வையாளர்களை கவர்ந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, மாணவியர்கள் விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகப்பிரியா மற்றும் அரசு ஊழியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments