மரபணு மாற்று கடுகுக்கு எதிராக திரண்ட பெண்கள்

மரபணு மாற்று கடுகுக்கு எதிராக திரண்ட பெண்கள்

மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மரபணு மாற்று கடுகு விதைக்கு எதிராக பெண்கள் இணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சமையலில் தாளிக்க பயன்படுத்தப்படும் கடுகு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டதாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


மரபணு மாற்று கடுகுக்கு எதிராக திரண்ட பெண்கள்
மரபணு மாற்று கடுகு

இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் பஸ் நிலையம் அருகில் தேதிய பாதுகாக்கப்பட்ட உணவுக்கான சர்வதேச தினமான நேற்று(9ந் தேதி) ஏராளமான பெண்கள் திரண்டு கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களோடு விவசாயிகளும் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள் இணைப்பு குழுவின் திருவண்ணாமலை ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமை தாங்கினார். இதில் பவானி, பழனி, ராஜேந்திரன், மீனாட்சி சுந்தரம், பிரகலாதன், உமா சங்கர், ராஜன், கார்த்தி, தணிகைமலை, லெனின், அன்பரசு உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். 


இது குறித்து பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுமதி கூறுகையில்,  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் புவியின் பல்லுயிர் சூழலுக்கே மரபணு மாற்று கடுகு விதைகள் கேடு விளைவிக்கும். எனவே இதை அனுமதிக்ககூடாது, அனைத்து விதமான களைக்கொல்லி மற்றும் பூச்சிகொல்லிகளையும் நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும், செயற்கையாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்க்கு மாற்றாக ஊட்டச்சத்து மிக்க மரபு ரக அரிசி மற்றும் சிறுதானியங்களை வழங்க வேண்டும், நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையை அமுலாக்க வேண்டும், சமீபத்தில் அதிகரித்துள்ள உணவுக்கலப்படத்தை தடுக்க சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றார். 


மரபணு மாற்று கடுகுக்கு எதிராக திரண்ட பெண்கள்
தாலுகா அலுவலகத்தில் மனு

களஞ்சியம் பெண் விவசாயிகள் 

பெண்கள் இணைப்பு குழுவின் ஒரு அங்கமாக களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய சிறுதானியங்கள் பயிர் செய்வதை ஊக்கப்படுத்தி வருகிறது. பாரம்பரிய சத்தான சிறு தானியங்களை மீட்டெடுக்க இந்திய சிறுதானிய கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய சிறுதானிய சகோதரிகள் அமைப்போடு பெண்கள் இணைப்பு குழுவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. 


கடந்த 10 ஆண்டுகளாக சத்தான சிறுதானியங்கள் உற்பத்தி செய்யவும் அன்றாட உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ளவும், அரசின் நியாய விலை கடைகளிலும், அனைத்து உணவு வழங்கும் திட்டங்களில் சிறுதானியங்களை வழங்க வேண்டும் என்றும், பஞ்சாயத்துக்குட்பட்ட தரிசு நிலங்களை சிறுதானிய உற்பத்தி செய்யும் பெண் விவசாயிகள் மற்றும் கூட்டு விவசாய குழுக்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க வேண்டியும் இந்த அமைப்பு அரசை வலியுறுத்தி வருகிறது. 


பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் பொருட்டு சிறுதானிய விதை திருவிழாக்கள், சத்தான உணவு உத்தரவாதத்திற்கான உணவு திருவிழாக்கள் நடத்தியும்,  சிறுதானிய பொங்கல் வைத்தும் கிராமங்களிலும், பள்ளி கல்லூரிகளிலும் இந்த அமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 


Next Post Previous Post

No comments