மேவாட் கொள்ளையர்களின் இலக்கு ஏடிஎம்தான்

திருவண்ணாமலையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையடித்த மேவாட் கொள்ளையர்கள் 10 பேர் பிடிபட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையடித்த மேவாட் கொள்ளையர்கள் 10 பேர் பிடிபட்டுள்ளனர். 

திருவண்ணாமலையில் தேனிமலை, மாரியம்மன் கோயில் தெரு ஆகியவற்றில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம், கலசப்பாக்கத்தில் ஒன் இண்டியா ஏடிஎம், போளுரில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் ஆகியற்றில் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி உடைத்து அதில் இருந்த ரூ.72 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டது. 


ஐஜி கண்ணன்


தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் மேவாட் கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அரியானா மாநில போலீசாரின் உதவியோடு முக்கிய குற்றவாளிகள் 2 பேரை திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் குஜராத்திலிருந்து விமானத்தில் தப்ப முயன்ற 6 பேரையும், பெங்களுர் கோலாரில் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார். 


திருவண்ணாமலையில் கைவரிசையை காட்ட அவர்கள் கோலாரில் முகாமிட்டு திட்டம் தீட்டியதும், ஏற்கனவே கொள்ளையடித்த ஏடிஎம்களை நோட்டம் விட்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. வாகன சோதனையிலும், சிசிடிவி கேமராவிலும் சிக்காமல் இருக்க மீண்டும் கோலாருக்கு கிராம புற சாலைகளின் வழியாக தப்பிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. 


ஏடிஎம்தான் இலக்கு


அரியானா மாநிலத்தில் உள்ள மேவாத் என்கிற மேவாட் மாவட்டம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகம் உள்ள இப்பகுதியில் ஊருக்குள் சென்று குற்றவாளிகளை பிடிப்பது என்பது சிரமமானதாகும். 


2021 ம் ஆண்டு சென்னையில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட ஏடிஎம் மிஷின்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டது. அதாவது ஏடிஎம் மிஷின்களில் சென்சாரை செயல் இழக்க செய்துவிட்டு ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை திருடி சென்று விடுவார்கள். இப்படி ரூ.55 லட்சம் திருடப்பட்டது. சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் இந்த முறையில் பணம் திருடப்பட்டது. 


இந்த திருட்டு சம்பவங்களில்தான் முதன்முறையாக தமிழ்நாட்டு போலீசாரால் மேவாட் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழக போலீசார் முக்கிய குற்றவாளியான அமீரை மேவாட்டில் பணியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டிஐஜி சதீஷ்பாலன் உதவியோடு சாதுர்யமாக ஊருக்கு வெளியே வரவழைத்து மடக்கி கைது செய்தனர். 


விமானம் மூலம் வந்து நோட்டம் 


இந்த கும்பலின் முக்கியத்தலையாக செயல்படுபவர்கள், விமானத்தில் வந்து கொள்ளை நடக்கும் இடம் மற்றும் திட்டங்களை வகுத்து கொடுப்பார்களாம். பிறகு மேவாட்டிலிருந்து கார் மூலம் ஒரு கும்பல் கொள்ளையடித்துச் செல்லுமாம். கொள்ளையடித்த பணத்தை ஊர் தலைவரிடம் ஒப்படைத்து பிரித்து கொள்வார்களாம். 


பின்தங்கிய பகுதியில் இருந்து வந்து தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல வழிகளில் ஏடிஎம் மிஷின்களில் கனகச்சிதமாக கொள்ளையடித்து செல்லும் மேவாட் கொள்ளையர்களுக்கு பயிற்சி கொடுத்து இயக்குவது யார்? என்பது புரியாத புதிராக உள்ளது.  


பொதுமக்களை தாக்கி கொள்ளையடிக்கும் பவாரியா கொள்ளையர்கள் போல் மேவாட் கொள்ளையர்கள் நடந்து கொள்வதில்லை. அவர்களுடைய ஒரே இலக்கு ஏடிஎம் மிஷின்கள்தான். ஆனால் யாராவது பிடிக்க வந்தால் தாக்குவார்கள். 


ஐஜி கண்ணன்


கொள்ளை கும்பல் தலைவன்


இப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவரிசையை காட்டிய மேவாட் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையில் உள்ள 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கோலாரில் உள்ள கொள்ளையர்களை போலீசார் நெருங்கியுள்ளனர். அங்கு கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்ட முகமது ஆரிப் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்து அவர்கள் மூலம் குஜராத்திலும், அரியானாவிலும் கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர். 


மேவாட் கொள்ளையர்கள் பல மாநிலங்களில் கைவரிசையை காட்டிய போதும் பிடிபடாமல் தப்பித்து வந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் நடந்த இரு வேறு ஏடிஎம் குற்ற சம்பவங்களிலும்  தமிழ்நாடு போலீசாரிடம் சிக்கியுள்ளனர். 


சென்னையில் 2021ல் நடந்த ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட மேவாட் கொள்ளையர்களை பிடித்தது அப்போது தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணன் தலைமையிலான தனிப்படைதான். இப்போதும் மேவாட் கொள்ளையர்கள் சிக்கியிருப்பது அதே கண்ணன் (தற்போது வடக்கு மண்டல ஐஜி) தலைமையிலான தனிப்படையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 



Next Post Previous Post

No comments