திருவண்ணாமலையில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கார் சேதமடைந்தது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை சாரோன் கரையான் செட்டி தெருவில் வசித்து வருபவர் சங்கர்(40), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திமுகவில் நகர தொண்டரணி துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஹூண்டாய் க்ரெட்டா கார் உள்ளது.
நேற்று இரவு சங்கர் தனது வீட்டில் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென கேட்ட வெடிச்சத்தத்தால் சங்கரின் தந்தை எழுந்து வந்து பார்த்தார். அப்போது போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தததை பார்த்து கூச்சலிட்டார்.
இதனால் வீட்டிலிருந்த சங்கரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து கார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இது சம்மந்தமாக வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டை வீட்டில் எறிந்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சங்கர் திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு காரணம் தொழில் போட்டியா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments