பெருந்துறைப்பட்டில் ஜீவசமாதி அடைந்த
சித்தர் வீரராகவலு சுவாமியின் குருபூஜை
திருவண்ணாமலை அருகே உள்ள பெருந்துறைப்பட்டில் ஜீவசமாதி அடைந்த சித்தர் வீரராகவலு சுவாமியின் குருபூஜை விமர்சையாக நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஸ்ரீவீரராகவலு, தான் பார்த்து வந்த அரசு வேலையை துறந்து விட்டு தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்தார். இங்கு பல கோயில்களுக்கு சென்று விட்டு திருவண்ணாமலை அடுத்த பெருந்துறைப்பட்டில் தங்கினார்.
இப்பகுதியில் உள்ள மக்களின் நோய், நொடிகளை தன்னிடம் உள்ள அரிய சக்தியால் தீர்த்து வைத்ததால் பிரபலம் அடைந்தார்.
1945ம் ஆண்டு அவர் அதே ஊரில் ஜீவசமாதி அடைந்தார். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் அவருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 78ம் ஆண்டு குருபூஜை, பெருந்துறைப்பட்டு மகாமாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. காலையில் கோபூஜை, கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து யாக பூஜை, குருபூஜை, மகேஸ்வர பூஜை நடைபெற்றன. பிறகு சித்தர் வீரராகவலு சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை சக்கரத்தாழ்வார்மடை கமலா பீடத்தின் நிறுவனர் சித்தர் ஸ்ரீசீனிவாச சுவாமிகள் நடத்தினார்.
அதன்பிறகு சாதுக்களுக்கு காணிக்கை, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி நாட்டியாஞ்சலி குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
குருபூஜைக்கான ஏற்பாடுகளை பெருந்துறைப்பட்டு ராமதாஸ் வாரிசுகளும், பேராயம்பட்டு நாராயணசாமி வாரிசுகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
0 Comments