பாத் பள்ளியில் 64 அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டி
திருவண்ணாமலை பாத் பள்ளியில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் சொரகொளத்தூர், நல்லவன்பாளையம் அரசு பள்ளிகள் கோப்பையை வென்றது.
திருவண்ணாமலை பாத் பள்ளியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 64 அணிகள் பங்கு பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி பரிசுகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் இயங்கி வரும் தி பாத் குளோபல் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்சி பள்ளிகளில் முதன்மையாக விளங்கி வருகிறது. கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு துறைகளிலும் இப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பாத் பள்ளியில் வாலிபால் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது உட்பட்ட மாணவ- மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் 44 அணிகளும், மாணவிகள் பிரிவில் 20 அணிகளும் கலந்து கொண்டனர். 2 நாட்களும் இவர்களுக்கு உணவு பள்ளி சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கனகாம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், 2வது பரிசை சொரகொளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியும், 3வது பரிசை எஸ்.கே.வி.மெட்ரிகுலேஷன் பள்ளியும் பெற்றன. பெண்கள் பிரிவில் சொரகொளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், நல்லவன் பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி 2வது பரிசையும், காவேரியாம் பூண்டி ரமணமகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3வது பரிசையும் தட்டிச் சென்றது.
சொரகொளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி அணி ஆண்கள் பிரிவில் 2வது இடத்தையும், பெண்கள் பிரிவில் முதலிடத்தையும், அதே பிரிவில் நல்லவன் பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி 2வது இடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு விழாவுக்கு பாத் பள்ளி தாளாளர் ஆர்.சந்தனதேவன் தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கீழ்பென்னாத்தூர் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர் விளையாடி விட்டு வந்து படித்தால் சுறுசுறுப்பு கூடும். விளையாட்டுத் துறையில் சாதனை படிக்கும் மாணவ-மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு ஒதுக்கீடு உண்டு. ரயில்வேயிலும் கண்டிப்பாக வேலை கிடைக்கும். எனவே மாணவ- மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு விளையாட்டு மற்றும் படிப்பிலும் கவனம் செலுத்தி சாதனை படைக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன், மாவட்ட கைப்பந்து பயிற்சியாளர் ஏ.முனுசாமி, முன்னாள் கைப்பந்து வீரர்கள் ஜி.அண்ணாமலை, டி. முனுசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமாரசாமி, கணேஷ் பாபு, ஜவஹர்லால் நேரு, சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments