15 சிலைகள் கொண்ட பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை - சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் 15 சிலைகளை உள்ளடக்கிய ஸ்ரீ திருப்பதி வெங்கடேச சீனிவாசபெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
திருவண்ணாமலை அடுத்த வீரணம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி-சுப்பிரமணி தம்பதியர், திருவண்ணாமலை - சென்னை ரோட்டில் உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டில் ஸ்ரீ திருப்பதி வெங்கடேச சீனிவாசபெருமாள் கோவிலை கட்டி 2017ம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
இக்கோயிலில் 15 அடி உயரத்தில் ஸ்ரீ திருப்பதி வெங்கடேச பெருமாள் விக்ரகமும், 7 அடி உயரத்தில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் அமர்ந்த கோலத்திலும், அரங்கநாதர் 12 அடி உயரத்தில் சயன கோலத்திலும் காட்சியளிக்கிறார்கள்.
இந்நிலையில் 10 அடி உயரத்தில் பத்மாவதி தாயாரும், 8 அடி உயரத்தில் கிருஷ்ணன் விக்கிரகங்களும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதோடு சேர்ந்து இக்கோயிலில் கருடாழ்வார், ஹனுமான், ஆண்டாள், இராமனுஜர், ஸ்ரீ ஜெயன், ஸ்ரீ விஜயன், குபேரர், வேணுகோபால் உள்பட 15 விக்ரங்கள் உள்ளன. புதிய சிலைகள் வடிவமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
15 அடி உயர பெருமாள் |
இதையொட்டி மகா சுதர்சனம், லஷ்மி, வாஸ்து சாந்தி, கும்ப ஆவாகனம், மகா சாந்தி யாகங்கள் நடைபெற்றன. நேற்று காலை கோ-பூஜையுடன் நான்காம் கால நித்திய யாகமும், கடம் புறப்பாடும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க காலை 9-45 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளி சித்தர் பீடம் அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்பிரமணி, வள்ளி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் டி.துரைசாமி நடராஜன், ராஜலட்சுமி நடராஜன், என்.சுரேஷ் நடராஜன், கணேசன், சாந்தி சுரேஷ், என்.சாதனா, என்.சாய்சர்வேஷ், சுரேஷ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments