திருவண்ணாமலை கோயிலுக்கு ரூ.1கோடி குத்தகை பாக்கி
திருவண்ணாமலை கோயிலுக்கு ரூ.1கோடி குத்தகை பாக்கி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கி 1 கோடி ரூபாய் இருப்பது வேதனையான விஷயம் என்றும்¸ இதை தமிழக அரசு வசூலிக்காதது வெட்ககேடான செயல் என்றும் இந்து மகா சபா கூறியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அய்யனாரப்பன் திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழா நேற்று காலை விமர்சையாக நடைபெற்றது.
காலையில் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தம்பதி பூஜையும்¸ 108 பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகமும் நடைபெற்றது. பின்னர் யாகசாலையை வைக்கப்பட்டிருந்த புனித நீரை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிறகு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் சு.பொலக்குணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் அகில பாரத இந்து மகா சபாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் நிர்வாகிகளோடு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
இந்த கோயிலுக்கு வரும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்திட வேண்டும். இந்து மதத்தை கொச்சைப்படுத்தி¸ இழிவுப்படுத்தி பேசுகிறவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை. ஆந்திராவில் இந்து மதத்தையும்¸ இந்து மத மட்டுமல்லாது எந்த மத நூலையும் இழிவு படுத்தினால் தண்டனை என ஜெகன்மோகன் ரெட்டி அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் இது போன்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மதசார்பற்ற நாடு
தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும். தமிழகத்தில தனியார் பள்ளிகள் மூலம் தமிழகத்தில் இந்தி மொழி வந்து விட்டது. அரசு பள்ளிகளிலும் இந்தி கொண்டு வரவேண்டும். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு மதத்திற்கு என்று ஒரு சட்டம் தேவையில்லை. இந்து அல்லாதவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை¸ ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்து பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதில்லை. மத அடிப்படையில் உள்ள வேறுபாடுகளை மாற்ற வேண்டும்.
அறநிலையத்துறை இந்து கோயில்களை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அரசர்கள் கட்டிய கோயிலை வேண்டுமானால் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிராம கோயில்களை கபளீகரம் செய்வது கண்டிக்கத்தக்கது. கிறிஸ்துவ கோயில்கள் கிறிஸ்துவர்களிடம்¸ முஸ்ஸீம் வழிபாட்டிடங்கள் முஸ்லீம்களிடம் உள்ள போது இந்து கோயில்கள் மட்டும் அரசிடம் ஏன் உள்ளது.
தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனம்¸ வழிபாடு மூலம் பணத்தை எப்படி எல்லாம் எடுப்பது என்பதை மட்டுமே பார்க்க கூடிய அரசாக தமிழக அரசு இருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்¸ காவி புரட்சி உண்டாகும். அப்போது ஆலயங்களில் சீர் கேடுகள் இருக்காது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழக அரசு உடனடியாக யானையை வழங்க வேண்டும். இக்கோயிலுக்கு ரூ.1 கோடி குத்தகை பாக்கியாக உள்ளது என்பது வேதனையான விஷயமாகும். தமிழக அரசும்¸ இந்து சமய அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்காதது வெட்ககேடான செயலாகும். இந்து அரசியல் விழிப்புணர்வு ரதயாத்திரையை இன்று திருவண்ணாமலையிலிருந்து துவக்கி உள்ளோம். இந்த ரதயாத்திரை முக்கிய ஊர்களின் வழியாக வருகிற 7ந் தேதி திருப்பூரில் முடிவடைகிறது.
இதைத் தொடர்ந்து 27ந் தேதி சென்னையில் நடைபெறும் மாநாட்டில் தேசியத் தலைவர் கலந்து கொள்கிறார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்துக்களின் கவுரவத்தை பாதுகாக்கிறவர்களுக்கு மட்டுமே இந்துக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இந்து விரோத கூட்டணியான திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments