எம்.ஜி.ஆர் போல் உண்டா?-ரஜினியை சீண்டிய பொன்னையன்

 

ரஜினி ரசிகர்கள் எல்லாம் மற்ற கட்சிகளில் ஐக்கிமாகி விட்ட நிலையில் எந்த அடிப்படையில் கட்சி அவர் ஆரம்பிக்க போவதாக சொல்லுகிறார் என்பது தெரியவில்லை என திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார். 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்  நடந்த மாநில சமநிலை வளர்ச்சி நிதி நடப்பு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் சி.பொன்னையன் கலந்து கொண்டார். 

பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸ 

மாநில வளர்ச்சி குழு மக்களுக்கும்¸ அவர்கள் வாழும் பகுதிகளுக்குமான தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மலைவாழ் மக்கள்¸ மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு மார்க்கெட் முக்கியம்.  ஆனால் அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு மார்க்கெட் இல்லாத சூழலால் தங்களுக்குள்ளே வட்டிக்கு விடும் தொழிலை செய்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் உயராது. 

எனவே அவர்களுக்கு எந்த தொழிலை செய்தால் நஷ்டம் வராது¸ எந்த பொருளை தயாரித்தால் விற்று விடும் என்பதை கண்டறிந்து அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். கிராம பொருளாதாரம் உயர வேண்டும்¸ ஏழை¸ எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்¸ இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் கொள்கையாகும். 

இவ்வாறு அவர் கூறினார். 

அதன் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு¸

1996ல் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்ற திமுக இப்போது எதிர்ப்பது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்¸ நாங்கள் ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என சொல்லவில்லை. ரஜினி 20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவதாக சொல்லி வருகிறார். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த ரஜினி ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் ஐக்கியமாகி விட்டனர். எந்த கருத்துக் கணிப்பில் அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது.

எம்.ஜி.ஆர் அரசியல்வாதியாக இருந்து சினிமாவுக்கு வந்தார். ரஜினி நடிகராக இருந்து அரசியலுக்கு வருவதாக சொல்லுகிறார். இது மாறுபட்ட உணர்வாகும். எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் ஏழை மக்களுக்காக¸ பாமர மக்களுக்காக¸ உழைக்கும் வர்க்கத்தினருக்காக¸ விவசாயிகளுக்காக¸ தமிழ்மொழிக்காக பாடுபடுவோம் என்பதை படங்கள் மூலமாகவும்¸ பாடல்கள் மூலமாகவும்¸ வசனங்கள் மூலமாகவும் எடுத்துரைத்தார். 

எம்.ஜி.ஆர் 1957லிருந்து நடித்த நாடோடி மன்னன் உள்பட அத்தனை படங்களிலும் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை பரப்பும் கொள்கை பரப்பு பீரங்கியாக செயல்பட்டார். அந்த அடிப்படையில் அரசியலுக்கு வந்தார். அது வேறு¸ ரஜினியின் அரசியல் செயல்பாடு வேறு¸ நோக்கம் வேறு. அவர் எந்த கணிப்பில் செயல்படுகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். 

கமல்¸ ரஜினி சேர்ந்தால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது¸ ஏனென்றால் திராவிட கலாச்சாரம் கொண்ட இந்த தமிழ் மண்ணில் பெரியார்¸ அண்ணா¸ எம்.ஜி.ஆர்¸ ஜெயலலிதா மற்ற திராவிட கட்சிகளின் தலைவர்கள் காலத்திலிருந்து தமிழ் உணர்வு வளர்க்கப்பட்டு விட்டது. ஆங்கிலத்தில் எஸ்க்கு பக்கத்தல் எச் போட்டு சண்முகம் என எழுதுவார்கள். இந்தி போன்ற பிற மொழிகளிலும் இப்படித்தான் உள்ளது. ஆனால் தமிழில் மட்டும்தான் வடமொழி சொற்கள் வராது. 

அந்த அளவிற்கு தமிழ் தனித்தன்மை வாய்ந்தது. இறைவன் தந்த மொழி தமிழ். தமிழ் மொழி எந்த காலத்திலும் வடமொழி தாக்குதலை ஏற்காது¸ சமஸ்கிருத தாக்குதலை ஏற்காது. எனவே தமிழ் பூமிக்குடைய, மண்வாசனைக்கு ஏற்ற அரசியல்தான் இங்கு ஒளிருமே தவிர மற்ற அரசியல் இங்கு வருவது சிரமம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ரஜனிகாந்த்¸ எம்.ஜி.ஆரை போன்று திரைப்படங்களில் எந்த நல்ல கருத்தை தெரிவித்தார் எனவும்¸ ரஜினி¸ கமல் அரசியல் தமிழ் மண்ணில் எடுபடாது என்பதையும்¸ அதிமுகவின் மூத்த தலைவரும்¸ முன்னாள் அமைச்சருமான பொன்னையன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். 


Next Post Previous Post

No comments